வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “ஆங்கிலேயர்களின் வரி வசூலுக்கு எதிராக போரிட்டு, ஆங்கிலேய படைகளை விரட்டியடித்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் இன்று. ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் வரி வசூல் செய்ய முயன்றபோது, தென் மாவட்டங்களில் எழுந்த போர்குரல்களில் முதன்மையானது மாவீரர் திரு. வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் குரல்.
இந்திய வரலாற்றில் முதல் விடுதலைப் போராக அறியப்படும் சிப்பாய் கலகம் உருவாகும் பல ஆண்டுகளுக்கு முன்பே, தென் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேய படைகளை விரட்டி அடித்தவர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர். இன்றைய தினத்தில், அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்” என்று கூறியுள்ளார்.


