சீனாவில் இருந்து கப்பலில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, இனிப்பு வகைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது தீபாவளி பண்டிகையின் சிறப்பாகும். இதற்காக பட்டாசு, புத்தாடை எடுக்க கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. உள்நாட்டு பட்டாசுகளை ஆதரிக்க வேண்டும் என்பதால், சீன பட்டாசு இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் பட்டாசு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் உள்ள ஹவசேவா துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து பட்டாசுகள் கடத்தி வரப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸாருடன், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விரைந்து சென்று துறைமுகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் சீன பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 6 கோடியே 32 லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டாசுகளை சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


