மூடப்பட்ட ரயில்வே கேட்டை பைக்கில் வேகமாக கடந்து விட முயன்ற புதுமாப்பிள்ளை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரியில் போடாகி ரயில்வே கிராஸிங்கில் தான் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட தண்டவாளத்தை பைக்கில் கடந்து விடலாம் என்ற எண்ணத்துடன் இளைஞர் ஒருவர் வேகமாக வந்துள்ளார். அப்போது தண்டாவளம் அருகே போடப்பட்ட சரளைக்கற்களில் அவர் பைக் சென்ற போது தவறி விழுந்தார். இதனால் கீழே விழுந்த பைக்கை அந்த இளைஞர் தூக்க முயன்றார். அப்போது வேகமாக ரயில் வந்துள்ளது. பைக்கை விட்டு விட்டு ஓட முயன்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், விரைந்து வந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர்,ததாவலி கிராமத்தைச் சேர்ந்த துஷார்(19) என்று அடையாளம் காணப்பட்டார். இவருக்கு வருகிற நவம்பர் 22-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் துஷார் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம், ததாவலி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


