மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் லிம்போபோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ஜிம்பாப்வேக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து செங்குத்தான மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதில் 7 குழந்தைகள், 17 ஆண்கள், 18 பெண்கள் அடங்குவர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலத்த காயமடைந்த ஒரு குழந்தை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேருந்து ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாட்டினரை ஏற்றிச் சென்றதாகவும், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது விபத்தில் சிக்கியதாவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்து குறித்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா கூறுகையில் “தங்கள் தோழர்களை இழந்த ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவிற்கும், ஜிம்பாப்வே மற்றும் மலாவிக்கும் நிகழ்ந்த சோகம். எங்கள் வருடாந்திர போக்குவரத்து மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, எங்கள் சாலைகளில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது விபத்து நடந்த லிம்போபோ மாகாணத்தில் கடந்த ஆண்டு பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். அப்போது பேருந்து ஒரு பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


