பரபரப்பு…தலைக்கு ரூ.1.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட கொள்ளையன் என்கவுன்டர்!

எட்டு நாட்களுக்குள் இரண்டு கார் டிரைவர்களைக் கொன்று அவர்களின் கார்களைக் கொள்ளையடித்த கும்பலின் தலைவனை போலீஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் டிரைவர்கள் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கார் டிரைவர் யோகேஷ் பால் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அவரது கார் திருடப்பட்டது. இதே போல ஷாஜகான்பூரில் மற்றொரு கார் டிரைவர் கொலை செய்யப்பட்டு அந்த காரும் கொள்ளையடிக்கப்பட்டது. எட்டு நாட்களுக்குள் இரண்டு கார் டிரைவர்களைக் கொலை செய்து அவரது கார்களை கொள்ளையடித்தது யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குருசேவக் தலைமையிலான கும்பல் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

ரூ.1.50 லட்சம் பரிசு

இதையடுத்து குருசேவக்கை பிடித்துக் கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று லக்னோ போலீஸார் அறிவித்தனர். அதே போல குருசேவக்கை பிடித்துக் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஷாஜகான்பூர் போலீஸார் அறிவித்தனர். இந்த கும்பலை சேர்ந்த விகாஸை பிடித்துக் கொடுத்தால், 25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவரை துபாக்கா சந்திப்பு அருகே நேற்று போஸீஸார் சுற்றி வளைத்தனர்.

என்கவுன்டர்

இந்த நிலையில், குருசேவக் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆக்ரா விரைவுச் சாலையில் செல்வதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீஸார் விரட்டிச் சென்றனர். அப்போது போலீஸாரை நோக்கி குருசேவக் கும்பல் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய என்கவுன்டரில் குருசேவக் கொல்லப்பட்டார். ஷாஜஹான்பூரில் திருடப்பட்ட கார், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் மீட்கப்பட்டன. ஆனால், குருசேவக் கூட்டாளி தப்பியோடி விட்டார்.

போலீஸார் காயம்

இந்த துப்பாக்கிச் சண்டையில், காவல் துறை குற்றப்பிரிவு பொறுப்பாளர் சிவானந்த் மிஸ்ரா மற்றும் தலைமைக் காவலர் அதுல் பாண்டே ஆகியோரின் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளில் குண்டு காயம் ஏற்பட்டது. காவல் வாகனத்திலும் ஒரு தோட்டா தாக்கியது. இந்த சம்பவம் குறித்து லக்னோ மேற்கு பகுதி துணை காவல் ஆணையர் (டிசிபி) விஸ்வஜீத் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை இரவு குருசேவக் கும்பலை சேர்ந்த அஜயை கைது செய்தோம். அப்போது ஷாஜகான்பூரில் வசிக்கும் குருசேவக் இருளைப் பயன்படுத்தி தப்பிச்சென்றார். 1.50 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட குருசேவக் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும், அந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

8 கொலை, கொள்ளை வழக்குகள்

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ” கடந்த செப்.29-ம் தேதி பாரா பகுதியில் ஒரு காரை குருசேவக் முன்பதிவு செய்துள்ளார். அவர் கார் ஓட்டுநர் யோகேஷ் பாலை கொலை செய்து   உடலை சீதாப்பூரில் வீசியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி குருசேவக் மற்றும் அவரது கும்பல், கார் ஓட்டுநர் அவ்னீஷ் தீட்சித்தின் காரை புவையனில் இருந்து உத்தராகண்ட்டில் உள்ள சிதார்கஞ்ச்சுக்கு முன்பதிவு செய்தனர்.

அவர்கள் அவ்னீஷை கொன்று அவரது காரைத் திருடியதுடன் உடலை ஷாஜகான்பூர்- பரேலி சாலையில் வீசி விட்டு சென்றனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருசேவக் மீது எட்டுக்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *