காரில் வந்த மர்மநபர் ஒருவர், இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன்பின் கொலையாளியும் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் கொலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேண்ட்டிற்கு காரில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹூஸ்டன் காவல் துறையினர் விரைந்து சென்று கொல்லப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த கொலையாளி யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மெக்கானிக் கடையில் இருவர் கொலை
இந்த நிலையில் தென்மேற்கு ஹூஸ்டனில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்ற போது இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இரண்டு பேரை சுட்டுக்கொலை செய்த கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றார் என்பது தெரிய வந்தது.
தற்கொலை
இதையடுத்து அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பெண் உள்ளிட்ட மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தவர், க்ரீக்பென்ட் டிரைவின் 8000 பிளாக்கில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார், கொலையாளி உடலை மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஒரு மெக்கானிக் என்பது தெரிய வந்தது. எதற்காக மூன்று பேரை சுட்டுக்கொலை செய்து அவர் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஹூஸ்டனில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் ஒருவரை கொலையாளி சுடும் போது அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் எடுத்ததால் அவரையும் சுட்டுக் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு பெண் உள்பட மூன்று பேரை சுட்டுக்கொலை செய்த கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


