இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்படது. மேலும், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து விற்பனை ரத்து செய்யப்பட்டது.
குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் டை எத்திலீன் கிளைசால் என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருமல் மருந்து தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் பதுங்கியிருந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து கம்பெனி உரிமையாளர் ரங்கநாதனை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.


