ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் கதறி துடித்தனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நோயாளிகளின் உறவினர்களும் உதவினர்.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு தீ பரவியது. இதனால் அந்த வார்டில் இருந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து அவசர சிகிச்சை வார்டில் இருந்த 5 பேரை மீட்டனர். ஆனால், அதற்குள் இருவர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோகராம் படேல், உள்துறை இணையமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தீ விபத்து நடந்த போது மருத்துவமனை ஊழியர்கள் தப்பியோடி விட்டதால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர்.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


