கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது மூத்த மகன் திருமூர்த்தி உயிரிழந்தார். இது தொடர்பாக இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெற்றனர். இதற்காக நாகராஜ், பாஜகவைச் சேர்ந்த கோகுலகண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோரிடம் சட்ட உதவிக்காக ரூ.10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், அவர்கள் மேலும் ரூ.10 லட்சம் வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி கேட்டு மிரட்டிள்ளனர். இதனால் நாகராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில், நாகராஜின் இளையமகன் அருணாசலம் சமூக வலைதளங்களில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாஜகவைச் சேர்த்த கோகுலகண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி முதலில் 10 லட்ச ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். தற்போது மீண்டும் , தேர்தல் வருகிறது , செலவுக்கு பணம் வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி மிரட்டுகின்றனர் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக நாகராஜ் புகார் அளித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், தன் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது உதவியாளர் மூலம் புகார் மனு காவல் நிலையத்தில் அளித்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட நிகழ்வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல் துறை உதவிட வேண்டும். அதே சமயம், எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டியதாக பாஜகவைச் சேர்த்த கோகுலகண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோரை அன்னூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


