கிருஷ்ணகிரியில் தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“உள்ளம் தேடி, இல்லம் நாடி”
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் தமிழகம் முழுவதும், தேமுதிக, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

“ரோடு ஷோ” திட்டம்
கிருஷ்ணகிரியில் இன்று ‘ரோடு ஷோ‘ சென்று, கேப்டன் ரத யாத்திரை வேன் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.
கரூர் சம்பவம்:-
ஆனால், கரூரில், தவெக தலைவர் விஜய்யின் ‘ரோடு ஷோ’வில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களை கூட்டி பொது இடங்களில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்துவதற்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தரப்பில் வகுக்கும் வரை,
அனைத்து கட்சியினருக்கும் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
அதன் பேரில், கிருஷ்ணகிரியில், பிரேமலதா விஜயகாந்தின் ‘ரோடு ஷோ’ மற்றும் வேன் பிரசாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
மாற்று ஏற்பாடு
மேலும், அதற்கு மாறாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணாதுரை சிலை எதிரே மேடை அமைத்து பொதுக்கூட்டம் பிரசாரம் மேற்கொள்ள பிரேமலதாவுக்கு அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


