கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதற்காக சென்னையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வருபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் அவர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதாவது விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என தெரிவித்து எக்ஸ் ததளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில்,” விஜய்யோடு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், இப்படி குறுக்கு புத்தியில் நீதிமன்றம் வழியாக என்ற போர்வையில் திமுக ஒரு தரப்பை அழிக்கவோ அவமானப்படுத்தவோ முடியும் என்றால் இது இன்று விஜய்க்கு நாளை நமக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு வெக்கமே இல்லாமல் மீடியா கூட்டம் ஒத்து ஊதுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், ” இதெல்லாம் வெக்கமா இல்லையா திமுக? நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இந்த நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும். நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன என்பது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று (அக். 4) காலை மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். இதன் பின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸார் விரைந்தனர். அங்கு அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


