வெடிக்காத வெடியின் திரியை வாயில் கடித்த போது திடீரென வெடி வெடித்து 8 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள் படோகர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவருக்கு சூரஜ்(10), ஆகாஷ்(8) உள்பட மூன்று மகன்கள் இருந்தனர். துர்கா பூஜையை முன்னிட்டு சிலைகள் கரைத்த போது கிராமத்தினர் வெடி வெடித்துள்ளனர். அப்போது வெடிக்காத சில பட்டாசுகளை ஆகாஷ் சேகரித்துள்ளார். வீட்டில் வந்து தனது சகோதரர் சூரஜீடன் சேர்ந்து வெடியை வெடிக்க வைக்க முயன்ற போது அது வெடிக்கவில்லை. அதனால் அதன் திரியில் உள்ள பேப்பரை தனது பற்களால் ஆகாஷ் கடித்துள்ளார்.
அப்போது திடீரென அந்த வெடி வெடித்தில் ஆகாஷின் தாடை உடைந்தது. அத்துடன் அவரது உதடுகள் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அத்துடன் பற்களும் உடைந்தன. ஆகாஷின் சகோதரர் சூரஜ் கண்களில் காயம் ஏற்பட்டது. வெடி வெடித்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷ், சூரஜ் ஆகியோரை ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன்றி ஆகாஷ் உயிரிழந்தார். சூரஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த ஆகாஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


