நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது.
தேசப் பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆதவ் ஆர்ஜுனாவின் எக்ஸ் தள பக்க பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா ? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டு ள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல் துறை கவனத்துடன் வழக்குப் பதிவு செய்து, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனாவை காவல் துறை கைது செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் தொடங்கும் தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு ஆதவ் அர்ஜுனா இன்று வந்தார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும்” என்று ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். இவர் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.


