
காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைரமுத்து(28) டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்த காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.
இதனால் இரண்டு குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பெண்ணின் தாய், வைரமுத்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வைரமுத்து மீது பெண்ணின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து இரண்டு தரப்பினரையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது வைரமுத்துவை காதலித்த பெண், அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில், வைரமுத்துவை காதலித்த பெண் சென்னைக்கு வேலை சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து பைக்கில் வைரமுத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல், வைரமுத்துவை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளது. இதனால் பயந்து போய் ஓடிய வைரமுத்துவை துரத்தி துரத்தி அந்தக்கும்பல் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த தகவல் அறிந்த வைரமுத்துவின் உறவினர்கள் விரைந்து வந்து அவரை மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையில் வைரமுத்துவின் காதலியின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் பதற்ற நிலை நிலவுவதால் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.