
உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து வந்தார். சுரேஷ்குமார் ஓவியராக பணிபுரிகிறார். அவர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலத்தை விற்று யூனியன் வங்கியின் பிஜ்னோர் கிளையில் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். அவர் பாஸ்புக்கை புதுப்பித்த போது, தனது கணக்கில் இருந்த ரூ.14 லட்சம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த விசாரணையில், இந்த தொகை ஆன்லைன் கேம் மூலம் செலவிடப்பட்டது என்று கண்டறியப்பட்டது. வீடு திரும்பிய சுரேஷ், தனது மகன் யாஷிடம் இதுகுறித்து கேட்டார். முதலில் பணத்தை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய யாஷ், இதன்பின் ஃப்ரீ ஃபயர் கேம் என்ற ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சத்தையும் இழந்து விட்டதாக கூறினார். இதனால் ஆன்லைன் சூதாட்டம் குறித்து யாஷிக்கு சுரேஷ்குமார் எடுத்துரைத்தார். யாஷின் டியூசன் ஆசிரியரும் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பண இழப்பு குறித்து புரிய வைத்துள்ளார்.
இதன்பின் வீடு திரும்பிய யாஷ் குமார், தனது அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதனால் பயந்து போன அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் யாஷ் குமார் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், யாஷ் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யாஷ் அவரது பெற்றோருக்கு ஒரே மகன். அவரது மரணச் செய்தியைக் கேட்டு தாய் விமலா மயக்கமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மயக்கம் தெளிய வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் 6-ம் வகுப்பு மாணவன் ரூ.14 லட்சம் இழந்ததால் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.