
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் பெயரை நவம்பர் 20-ம் தேதி அவர் அறிவிக்க உள்ளார்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. இவருக்கும் மதிமுக முதன்மை செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மல்லை சத்யா கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டார். இந்நிலையில், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யா கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழாவில் மல்லை சத்யா தமது ஆதரவாளர்களுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி, 75 சதவீதம் சிவப்பு மற்றும் 25 சதவீதம் கருப்பு நிறங்களால் ஆனது. கொடியின் வலதுபுறத்தில் ஏழு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
புதிய கட்சி தொடங்குவதற்கென, மதிமுகவிலிருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புலவர் செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.