
அன்புமணி தான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என வழக்கறிஞர் கே.பாலு கூறினார்.
இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், * பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின்படி, ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அத்துடன் 2026 வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் பாமக நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
இதன் மூலம் அன்புமணிதான் பாமக தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நோக்கி தான் நாங்களும் பயணிக்கிறோம். எனவே, அனைவரும் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு வாருங்கள் என்றார். இதையடுத்து பாமக அலுவலகம் முன்பு கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுககு இனிப்பு வழங்கினார்.