
டெல்லியின் சப்ஜி மண்டியில் இன்று அதிகாலை திடீரென நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புச் சேவைக்கு இன்று அதிகாலை 3.05 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. நெரிசலான பஞ்சாபி பஸ்தி பகுதியில் அமைந்துள்ள அந்த நான்கு மாடிக் கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததாக அப்பகுதியில் இருந்து மக்கள் கூறினர். இதனால் அருகில் வசிப்பவர்கள் விழித்துக் கொண்டனர்.
இந்த கட்டிடம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால், கட்டிடத்தில் யாரும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு சேவை வீரர்கள் உறுதிப்படுத்தினர். டெல்லி நகராட்சி(எம்சிடி) இந்த கட்டிடத்தை ஆபத்தானது என்று குறிப்பிட்டதன் அடிப்படையில், அதில் இருந்தவர்கள் ஏற்கெனவே காலி செய்யப்பட்டிருந்தனர். இடிந்து விழுந்த கட்டிடம் காலியாக இருந்தபோதிலும், 14 பேர் அருகிலுள்ள கட்டமைப்பில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக அனைவரையும் மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.