
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள பார்வுட் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்சுதீன்(55), செல்லதுரை(48) ஆகியோர் இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை சம்சுதீனை துரத்திச் சென்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார். மேலும் காட்டுயானை தாக்கியதில் செல்லதுரை படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக செல்லதுரையை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்சுதீன் உடல், பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தேயிலை தோட்டத்திற்குள் சுற்றித் திரியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளி காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.