
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 81,200 ரூபாயாக உயர்ந்துள்ளது..
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
அந்த வகையில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. அன்றை தினம், ரூ.80,040-க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. நேற்றைய தினம் தங்கம் கொஞ்சம் குறைந்து, பின்னர் மீண்டும் எகிறியது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,150 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. 2025ம் ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.