
பாஜக எம்.பியின் சகோதரி குளிக்கும் போது ரகசியமாக வீடியோ எடுத்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பரூகாபாத் எம்.பியாக இருப்பவர் முகேஷ் ராஜ்புத். பாஜகவைச் சேர்ந்த இவர் சகோதரி தாக்கப்படும் வீடியோ வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் ராஜ்புத்தின் சகோதரி ரீனா சிங். இவர் எட்டா மாவட்டத்தில் அவந்திபாய் நகரில் திருமணமாகி கணவர், இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணாகி 17 ஆண்டுகளாகிறது.
இந்த நிலையில் தனது மாமனார், மைத்துனர்கள் தான் குளிக்கும் போது ரகசியமாக படம் எடுத்ததாகவும், இதைத் தட்டிக் கேட்ட தன்னை மாமனார் துப்பாக்கியின் பின்புறம் மூலம் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் மாமனார், மாமியார், மைத்துனர்கள் ஆகியோர் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக அவர் புகார் அளித்துள்ளார். அவர் காவல் துறையினரிடம் அளித்துள்ள புகாரில், சம்பவ நாளான ஞாயிறன்று மதியம் குளியலையில் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது தனது மாமனார் லட்சுமண சிங் மற்றும் மைத்துனர் கிரிஷ் ஆகியோர் குளியலறை ஜன்னல் வழியாக ரகசியமாக என்னை படம் பிடித்தனர். இதைத் தட்டிக் கேட்ட தன்னை தாக்கியதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
மேலும், மாமனார் லட்சுமண சிங் மற்றும் மைத்துனர்கள் ராஜேஷ், கிரிஷ் ஆகியோருடன் சேர்ந்து தன்னைக் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது மாமனார் சிங்கிடம் கூறியதற்கு, அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதுடன், தடியால் தாக்கினார் என்றும் கூறியுள்ளார். தனது மைத்துனர் ராஜேஷ் கத்தியால் தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டதாகவும், கிரிஷ் இரும்புக் கம்பியால் தாக்கியதாவும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மாமியார் தாக்கும் வீடியோவையும் போலீஸில் ஒப்படைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் லட்சுமண சிங், ராஜேஷ், கிரிஷ் ஆகியோர் மீது சஹாவர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.