
மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் வாயிலாக, 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக நேற்று மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து மும்பை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மும்பையில் விநாயகர் சிலை கரைக்கும் விழாவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ள நிலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான இடங்களில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மும்பை போக்குவரத்து போலீஸாரின் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பிஹாரை சேர்ந்த அஸ்வின்குமார் சுப்ரா(50) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போன்கள், சிம்கார்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், விசாரணைக்காக அவரை மும்பை கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த காலங்களில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் போக்குவரத்து போலீசாருக்கு வந்துள்ளன, அவை தவறான எச்சரிக்கைகளாக மாறிவிட்டன. எனவே மிரட்டல் குறித்து பீதி அடையத் தேவையில்லை. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ”என்றனர்.