
ஆசையாக வாங்கி வரச்சொன்ன சமோசாவை கணவன் வாங்கி வராததால் ஏற்பட்ட தகராறில் நடைபெற்ற அடிதடி சம்பவம் இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தில் உள்ள புரான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவம்(26). இவரது மனைவி சங்கீதா(23). இவருக்கு சமோசா என்றால் மிக விருப்பம். எனவே, கணவனிடம் சமோசா வாங்கி வரச்சொல்லி அடிக்கடி சாப்பிட்டுள்ளார். சம்பவ நாளன்று வேலை முடிந்து வரும் போது, மறக்காமல் சமோசாவை வாங்கி வர வேண்டும் என்று சிவத்திடம் சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், வேலை முடிந்த களைப்பில் வீடு திரும்பிய சிவம், சமோசாவை வாங்க மறந்து விட்டார். வீட்டில் சமோசாவிற்காக காத்திருந்த சங்கீதா, கணவன் சிவத்திடம் சமோசா எங்கே என்று கேட்டுள்ளார். வேலை களைப்பில் வாங்க மறந்து விட்டேன் என்று சிவம் கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது.
இதனால் தனது தந்தை ராம்லதேட், தாய் உஷா ஆகியோருக்கு உடனடியாக போன் செய்து நடந்தவற்றை சங்கீதா கூறியுள்ளார். பெரியவர்களான அவர்கள் விரைந்து வந்து தங்களது மகளுக்கு சமோசாவெல்லாம் ஒரு பிரச்னையா என புத்தி சொல்வதற்குப் பதில், மருமகன் சிவத்திடம் சண்டையிட்டனர். இதை சிவத்தின் தந்தை விஜய்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா மற்றும் அவரது பெற்றோர், சிவத்தையம், அவரது தந்தை விஜய்குமாரையும் அடித்து நொறுக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த மறுநாள் சமோசா பிரச்னை பஞ்சாயத்திற்கு வந்தது. ஊர் கூடி என்ன பிரச்னை என்று விசாரித்துக் கொண்டிருந்த போது, சங்கீதாவின் குடும்பத்தினர், சிவத்தின் குடும்பத்தினரை மீண்டும் தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சங்கீதா குடும்பத்தினர் மீது கொலை முற்சி வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமோசாவிற்காக ஊர் பஞ்சாயத்து கூடும் அளவிற்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற அடிதடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.