
ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 கோடி இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 5, 12, 18, 28 சதவீதம் என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணத்தால் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40 சதவீதமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாற்றங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நுகர்வு அதிகரிக்வும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறியுள்ளது. சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12 சவீதம் முதல் 5 சதவீதம் அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பது சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.