
திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் மன்னிப்புக் கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 28-ம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணி சம்பந்தமான நிதி கோப்பினைக் கேடடுள்ளார். ஆனால், அதற்கு முனியப்பன், சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். அப்போது ரம்யாவிடம் முனியப்பன் மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்டால் போதுமா என்று அவர் கேட்டதற்கு, முனியப்பன் தானாகவே சென்று ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறிய அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அரசு ஊழியரை மன்னிப்புக் கேட்கச் சொல்லியதோடு, காலில் விழ வைத்ததாக திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், நகராட்சி மேலாளர் நெடுமாறன் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் அரசு ஊழியர் முனியப்பன் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்பட்து சிசிடிவி கேமராக காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முனியப்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் இடுப்பில் கை வைத்து மன்னிப்புக்கேட்டு தவறான சீண்டலில் ஈடுபட்டதாகக்கூறி திண்டிவனம் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்தார். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.