
தென்மேற்கு பாகிஸ்தானில் நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் பேரணி நடைபெற்றது. இதில் சர்தார் அதாவுல்லாவின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் கலந்து கொண்டார்.
பேரணி முடிந்து மக்கள் வெளியேறும் போது வாகன நிறுத்தும் இடத்தில் இருநது குண்டு வெடித்தது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இருந்து சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அதர் ரஷீத் கூறுகையில், இது தற்கொலைப்படை குண்டு வெடிப்பு எனத் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து இப்படியான தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.