
சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடுகள் நடந்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இந்த வழக்கில் வேலுமணிக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தது. ஆனாலும், கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது..
இந்த வழக்குத் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், “எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகப் புதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் மீது வழக்குத் தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையடுத்து, ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.