
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமின்றி நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட், ஜம்மு- காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று மற்றும் செப்.6-ம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.