
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். ஏற்கெனவே அவர் மீது அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்த்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்பது செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
ஆனால், அவரின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதனால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் கூட்டங்களை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டமன்றத்தில் தனித்து செயல்பட்டார். இந்த நிலையில், திடீரென டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனால் இருவருக்கும் இடையே இருந்த பிரச்னை சுமூகமானது. இந்த நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் மேட்டுப்பாளைய பிரசார நிகழ்ச்சியில் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அத்துடன் தனது ஆதரவாளர்களுடன் செப்டம்பர் 5-ம் தேதி அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிரசாரம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே அதிமுக பல்வேறு குழுவாக பிரிந்து கிடக்கும் நிலையில், செங்கோட்டையன் பிரச்னை மீண்டும் அந்த கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.