
பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள், கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. இவர் பிஆர்எஸ் கட்சியில் மேலவை உறுப்பினராக இருந்தார். சந்திரசேகர ராவ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டம் குறித்து விசாரணை நடத்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிஆர்எஸ் கட்சியினர் மீது கவிதா குற்றம் சாட்டி வந்தார். குறிப்பாக, காலேஸ்வரம் அணை கட்டுமானக் காலத்தின் போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த தனது தாய்மாமாவான ஹரிஷ் ராவ், எம்.பி.சந்தோஷ் ஆகியோர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதால், தனது தந்தை சந்திரசேகர ராவ்க்க அவப்பெயர் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அவரின் இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியிருந்தார். இதனால் பிஆர்எஸ் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கவிதா கூறியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.