
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சுமார் 7 முதல் 11 செ.மீ கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா கடலோரப்பகுதிக்கு அப்பால் வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்து வருகிறது. இந்த சூழலில் வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 7 முதல் 11 செ.மீ கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. கோவை குற்றால அருவியில் மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.