
தமிழ்நாட்டில் பிஹாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது இந்திய முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடம் பெயர்ந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் கைபொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில் பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையை கடந்த 17-ம் தேதி தொடங்கினார். மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த யாத்திரையில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிஹார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.
இந்நிலையில், பிஹார் மாநிலம் முகாபர்பூரில் நேற்று நடந்த பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். திறந்த ஜீப்பில் ராகுல் காந்தி, தேஜஸ்வி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரியங்கா காந்தியும் இந்த யாத்திரையில் பங்கேற்றார். இதன் பின் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்திற்கு ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் .கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே சென்றிருந்தார்.? அவரின் இந்தத் தன்மை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவிடமும் இருக்கிறது. ‘கூலி வேலை செய்வது பிஹாரிகள் மரபணுவில் உள்ளது’ என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார். அவரை காங்கிரஸ் கவுரவிக்கிறது. பிஹாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது” என்றார் பிரசாந்த் கிஷோர்.