
கோவை அருகே வேனில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிப்பொருள் கடத்தப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெடிபொருட்கள் கடத்துபவர்களை பிடிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் களத்தில் இறங்கினர். இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளாவை நோக்கிச் சென்ற வேனை மதுக்கரை அருகே தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவை சட்டவிரோதமாக கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை வெடிபொருட்களுடன் பறிமுதல் செய்து மதுக்கரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மலப்புரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சுபேரையும் கைது செய்தனர். நாசவேலைக்காக இந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கேரளாவில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை எடுத்துச் செல்வதாக வேன் ஓட்டுநர் சுபேர் கூறினார். ஆனால், அந்த வெடிபொருட்களுக்குரிய உரிமம், ஆவணங்கள் உள்ளதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.