
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபாத்பூர் கிராமத்திலிருந்தைச் சேர்ந்த 61 பேர் ஒரு டிராக்டரில் ராஜஸ்தானில் உள்ள ஜஹார்பீர் கோயிலுக்குச் சென்றனர். இந்த டிராக்டர் அர்னியா பைபாஸுக்கு அருகிலுள்ள புலந்த்ஷஹர்-அலிகர் எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் முற்றிலும் சிதைந்து போனது.
இதில் டிராக்டரில் வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீஸாரும் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். காயமடைந்த 10 பேர்அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 10 பேர் புலந்த்ஷஹர் மாவட்ட மருத்துவமனைக்கும், 23 பேர் குர்ஜாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில், வேகமாக வந்த லாரி டிராக்டர் பின்புறம் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் வந்த டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
இந்த விபத்தில் இறந்தவர்களில் டிராக்டர் ஓட்டுநர் பாபு (40), ரம்பேட்டி (65), சந்த்னி (12), கானிராம் (40), மோக்சி (40), சிவன்ஷ் (6), யோகேஷ் (50) மற்றும் வினோத் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோயிலுக்குச சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.