
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வருபவர்களிடம் கட்டணக்கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் திருப்புவனத்தில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தினமும் வந்து திதி, தர்ப்பணம் கொடுத்து செல்கிறார்கள்.
இதேபோல் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கின்றனர். குறிப்பாக தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான மக்கள் வருவது வழக்கம். அமாவாசை நாட்களில் மட்டும் திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் நீளமான பந்தல்கள் அமைத்து திதி, தர்ப்பணம் தனித்தனியாக நடைபெறும். மற்ற நாட்களில் ஆற்றின் கரையோரம் மரத்தின் அடியில் திதி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு வருபவர்களிடம் பெரும் கட்டணக்கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம் 100 ரூபாய் டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால், திதி, தர்ப்பணம் கொடுக்க எந்த பொருளும் அவர்கள் வழங்குவதில்லை. இதற்காக ஒவ்வொருவரும் 150 ருபாய் கொடுத்து பொருட்களை கடைகளில் வாங்க வேண்டும். இதன் பின் திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் வைகை கரையோரம் மரத்தின் ஓரத்தில் ஒரே இடத்தில் அமர வைக்கப்படுகிறார்கள். புரோகிதர்கள் மொத்தமாக மந்திரத்தை சொல்லச் சொல்கிறார்கள். ஒலிபெருக்கி ஏற்பாடு இல்லாத காரணத்தால், அவர்கள் சொல்வது திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களுக்கு புரிவதில்லை.
ஆனால், திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் 550 ரூபாய் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இதுபோக தண்ணீர் ஊற்றுபவர்கள் என வருபவர்கள் 50 ரூபாய் வாங்குகிறார்கள். காரில் வந்தால், அதற்கு தனியாக 20 ரூபாய் வருகிறார்கள். இதனால், தங்கள் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுக்க வரும் வறுமை நிலையில் உள்ளவர்கள் திருப்புவனத்தில் நடக்கும் கட்டணக்கொள்ளையைப் பார்த்து எந்த சடங்கும் செய்யாமல் திரும்பிச் செல்கிறார்கள்.
குத்தகை என்ற பெயரில் திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களில் 100 ரூபாய்க்கு டோக்கன் கொடுப்பவர்கள் எதற்காக இந்த தொகையை வாங்குகிறார்கள் என்று தெரியப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பெண்கள், வைகை ஆற்றில் உள்ள தொட்டியில் குளித்து விட்டு உடை மாற்ற இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். இதனால் பொதுவெளியில் உடை மாற்றம் அவலநிலை உள்ளதாக கவலையோடு கூறுகின்றனர்.
மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் நடக்கும் தர்ப்பண நிகழ்வுகளில் புரோகிதர்கள் 100 ரூபாய் தான் வசூல் செய்கிறார்கள். அங்கு மைக், ஒலிபெருக்கி ஏற்பாடுடன் திதி, தர்ப்பண நிகழ்ச்சி சிறப்பாகவே நடக்கிறது. ஆனால், திருப்புவனத்தில் அப்படி எதுவும் இல்லாமல் நடக்கும் கட்டணக்கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.