
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துண்டு, துண்டாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். காமரெட்டிகுடா பகுதியை சேர்ந்த ஸ்வாதியை(21) மகேந்திர ரெட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பாலாஜி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மனைவியை காணவில்லை என தனது சகோதரிக்கு போனில் தொடர்பு கொண்டு மகேந்திர ரெட்டி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், ஸ்வாதியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மகேந்திர ரெட்டியிடம் விசாரணை நடத்திய போது ஸ்வாதி காணவில்லை என்று கூறினார். ஆனால், அவரின் பேச்சால் சந்தேகமடைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது , ஸ்வாதியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தலை, கை, கால்களை முசி ஆற்றில் வீசியதாக மகேந்திர ரெட்டி கூறினார். அத்துடன் ஸ்வாதியின் மீதமுள்ள உடல் பாகத்தை வீட்டில் வைத்திருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், வீட்டில் இருந்த ஒரு அறையில் இருந்து மனித உடலின் பாகங்களை மீட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், ஸ்வாதி ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்குள் ஒரு மாதத்திலேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஸ்வாதி புகார் அளித்துள்ளார். ஆனால், ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஸ்வாதி வேலைக்குச் செல்வதால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் என மகேந்திர ரெட்டி தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மார்ச் மாதம் ஸ்வாதி கருவுற்றது தெரிய வந்தது. கடந்த 22-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதுடன் அங்கேயே தங்கியிருப்பதாக ஸ்வாதி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை ஆகஸ்ட் 23-ம் தேதி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி மகேந்திர ரெட்டி ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இந்நிலையில், ஆற்றில் வீசப்பட்ட ஸ்வாதியின் உடலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து அது ஸ்வாதியின் உடல் தானா என டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். கர்ப்பிணி மனைவியை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி கணவனை கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.