
உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோலாகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஹமீர்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளிடம் அனுராக் தாக்கூர், , “விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் யார்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பள்ளி மாணவர்கள், “நீல் ஆம்ஸ்ட்ராங்.” என்று பதிலளித்தனர். அதற்கு அனுராக் தாக்கூர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், இதுவரை நாம் இவ்வளவுதான் பார்த்திருக்கிறோம். நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் பற்றிய அறிவு நமக்கு இல்லாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவற்றுடன் மட்டுமே நாம் மட்டுப்படுத்தப்பட்டிருப்போம். முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நமது வேதங்கள், மரபுகள் மற்றும் அறிவை நோக்கி நகர்ந்தால், நாம் நிறைய பார்க்க முடியும்.” என்று கூறினார்.1969-ம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அனுமன் தான் என அறிவியலுக்கு எதிராக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியது சமூக வலைதளங்களில் ட்ரோலாகி வருகிறது. அவரை கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.