
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, தேர்தல் வியூகங்களை அமைப்பதற்காக நெல்லையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 8,595 கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார். அமித்ஷா வருகையை முன்னிட்டு நெல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கொச்சியில் இன்று காலை 10:45 முதல் 11:45 வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித்ஷா பின்னர், மதியம் 2:50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் தரையிறங்குகிறார். மாலை சுமார் 3.20 மணியளவில் பூக்கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் நிர்வாகிகளிடம் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.