
இளைஞரை மர்மக்கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், முசாபார்பூரின் அஹியாபூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நபிபூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரோஹித் குமார்(21). இவர் வீட்டின் அருகே சென்ற போது மர்மக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அவர்களிடம் தப்பிக்க நினைத்த அவரை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் ரோஹித் குமார் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரோஹித் குமாரை மீட்டு பைரியாவில் உள்ள மா ஜான்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பழைய பகை காரணமாக ரோஹித் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அபிஷேக் என்பவர் ரோஹித்தின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். கோயில் திருவிழாவில் சாமி கும்பிடுவதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அபிஷேக் குடும்பத்தினர் மீது ரோஹித் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து ரோஹித் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவான மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலை காரணமாக கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.