
பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தில் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பாடவேளையில் ஒரு வகுப்பறையில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது 10-ம் வகுப்பு படிக்கும் ஆதித்யா வர்மா என்ற மாணவனை, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐந்துமுறை குத்தியுள்ளார். அத்துடன் தடுக்க முயன்ற மேலும் மூன்று மாணவர்களை அந்த மாணவர் கத்தியால் குத்தினார்.
இந்த சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கத்தியால் குத்தப்பட்ட மாணவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால், வரும் வழியிலேயே 10-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா வர்மா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலைப் பார்த்து ஆதித்யா வர்மாவின் தந்தை சிவ்ஜி வர்மா கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சண்டையிடும் குணமடையவர். ஆக.14 மற்றும் ஆக.15-ம் தேதிகளில் அவர் பள்ளிக்கு வெளியே சண்டை போட்டார். இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் மாணவனின் உயிர் பறிபோய் இருக்காது என்றனர்.
இந்த கொலை தொடர்பாக இரண்டு சிறுவர்களைக் கைது செய்த போலீஸார், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகத்திடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. பள்ளிக்குள் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.