
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை மர்மநபர் ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதலமைச்சராக இருப்பவர் ரேகா குப்தா. பாஜகவைச் சேர்ந்த இவர், சிவில் லைன்ஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்களிடம் இருந்து மனு பெறும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அவர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மர்மநபர், முதலமைச்சர் ரேகா குப்தா மீது பாய்ந்து தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நபரை பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவத்தையடுத்து துணை காவல் ஆணையர் முதலமைச்சர் ரேகா குப்தாவின் இல்லத்திற்கு விரைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் முதலமைச்சரின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலை பல்வேறு கட்சியினர் கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலுக்குப் பின் அரசியல் சதி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “டெல்லி மக்களுக்காக முதலமைச்சர் அயராது உழைக்கிறார், இது எதிர்க்கட்சிகளின் சதி தவிர வேறில்லை. ஒரு முதல்வர் மணிக்கணக்கில் பொதுமக்களிடையே செலவிடுவதையும், கட்டுப்பாடுகள் இல்லாமல் தனது இல்லத்தில் மக்களை வெளிப்படையாக சந்திப்பதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. டெல்லி காவல் துறை இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது, மேலும் அனைத்து உண்மைகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” என்றார்.
மற்றொரு அமைச்சரான கபில் சர்மா தனது எக்ஸ் தளத்தில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். அதில், ” முதலமைச்சர் ரேகா குப்தா ஜியைத் தாக்க முயற்சிப்பது ஒரு கோழைத்தனமான செயல். ஆயுஷ்மான் கார்டு, தேவி பேருந்துகள், கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் யமுனையை சுத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு பயந்தவர்கள் இப்போது இதுபோன்ற தந்திரோபாயங்களை நாடுகிறார்கள். மக்களின் ஆணையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதியான அரசாங்கம், டெல்லியின் வளர்ச்சிக்காக தலைவணங்கவோ நிறுத்தவோ மாட்டாது” என்று கூறினார்.
டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடு மற்றும் போராட்டத்திற்கு இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை” என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. முதலமைச்சர் டெல்லி முழுமையும் வழி நடத்துகிறார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பது குறையும் என்று நான் நினைக்கிறேன். இந்த சம்பவம் பெண்ணின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது. டெல்லி முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், ஒரு சாதாரண ஆணோ அல்லது சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.