
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் நட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் அப்பளம் போல் நொறுங்கியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை (ஆக.21) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறும் திடலைச் சுற்றி கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென்று மாநாட்டுத் திடலில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,500 காவலர்கள் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநாட்டு அரங்கில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நடும் பணி பொதுச்செயலாளர் ஆனந்த் மேற்பார்வையில் இன்று நடைபெற்றது. கிரேன் மூலம் 100 அடி கொடிக்கம்பத்தை நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென ரோப் அறுந்ததால் கொடிக்கம்பம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. இதில் அங்கு நின்ற கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.