
தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நோக்கி தனது பயணத்தை துவக்கியுள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டியில் கடந்த ஆண்டு முதல் மாநில மாநாட்டை நடத்திய விஜய், தேர்தல் நடைபெற 8 மாதங்களே உள்ள நிலையில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை இன்று நடத்துகிறார். மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தியில் இன்று மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்குகிறது.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்து. ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 5 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோர் மதுரைக்கு நேற்றே வந்து விட்டனர். இரவு 7 மணியளவில் மதுரை வந்த விஜய், மாநாட்டு பணிகளைப் பார்வையிட்டார்.
நடிகர் விஜய்க்கு பெண் ரசிகைகள் என்பதால், மாநாட்டில் பெருமளவு பெண்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 50 பெண் பவுன்சர்கள் உள்பட 55 பவுன்சர்கள் மற்றும் 2 ஆயிரம் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாடு நடைபெறும் பாரபத்தி பகுதியில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.