
சட்டமன்ற தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது அடுத்த 2026 ஜனவரி மாதம் உங்களுக்கு தெரியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவை சேர்ந்தவர்கள் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும். அது வெற்றிக்கு உதவி செய்யும். அமமுகவுடன் சேர்ந்து ஓபிஎஸ் தேர்தலை சந்திப்பார்.
அதிமுகவைப் பற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதை உரியவர்கள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் அது தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுகிறார்கள். தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது அடுத்த 2026 ஜனவரி மாதம் உங்களுக்கு தெரியும். மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்று அமமுக போட்டியிடும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி திமுகவை வீழ்த்தும் நோக்கில் அமித் ஷா கடினமான முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளரை அவர்கள் சொல்கின்ற போது அதை அமமுக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆதரிப்போம் என்றார்.