
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பாதுகாவலரான அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட போதும், சமீபத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.