
சொத்து தகராறு காரணமாக வயதான தந்தையை இரண்டு மகள்கள் கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தான், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சஸ்னி தாலுகா பகுதியில் ஒரு வயதான முதியவரை அவரது இரண்டு மகள்கள் கடுமையாக தாக்கினர். தங்களது மூதாதையூர் சொத்தை தங்களுக்குத் தெரியாமல் தந்தை விற்க முயற்சி செய்வதாக கூறி அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த இந்த தாக்குதலை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், யாரோ இந்த சம்பவம் முழுவதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிறகு தான் இச்சம்பவம் வெளி உலகிற்குத தெரிய வந்துள்ளது.
அந்த வீடியோவில் தங்கள் கையில் இருக்கும் குச்சிகளால் தந்தையை தொடர்ந்து அவரது மகள்கள் தாக்குவது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றி நிற்கும் மக்கள், அந்த காட்சியை செல்போன்களில் வீடியோ எடுப்பதும் பதிவாகியுள்ளது. நாக்லா கந்தா கிராமத்தைச் சேர்ந்த அந்த வயதான தந்தை நிலத்தை விற்கும் நோக்கத்துடன் தாலுகா அலுவலகம் வந்த போது அவரது திருமணமான இரண்டு மகள்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்களிடம் ஆலோசிக்காமல் நிலத்தை தந்தை விற்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ள அவரது மகள்கள், அந்த கோபத்தில் தந்தையை தாக்கியதாக கூறியுள்ளனர்.
அத்துடன் போதைக்கு அடிமையான தங்கள் தந்தையை சில வெளியாட்கள் பயன்படுத்தை சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அதை விற்க தந்தைக்கு உரிமை இல்லை என்றும் கூறினர். பலத்த காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில் தாக்குதல் நடத்திய இரண்டு மகள்களும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ அடிப்படையில் ஹத்ராஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாலுகா அலுவலகம் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சம்பவம் நடந்தது உண்மைய என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த போது சாஸ்னி தாலுகாவில் ஊழியர்கள் பணியாற்றினார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தந்தை மீது மகள்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.