திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால்?… அன்புமணி பரபரப்பு அறிக்கை

ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 15-ம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’’ என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

புகையடித்த மரங்களில் பூக்கள் மலர்க… கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான கவிதை

உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து கவிதை வடித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அலாஸ்காவில்…

எடப்பாடிக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது- திருமாவளவன் திடீர் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கு பதில் சொல்கிறோம் என்று எதையும் பேசக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ” ஆணவக் கொலைக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *