
எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கு பதில் சொல்கிறோம் என்று எதையும் பேசக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ” ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற மாவட்டத் தலைநகரங்களில் திட்டமிட்டவாறு இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மேடைகளில் பேசக்கூடிய நபர்கள் திருச்சியில் நடந்த மதச்சார்பின்மையை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மட்டுமே விளக்கி பேச வேண்டும். நடப்பு அரசியல் குறித்து பேசுகிறோம் என்ற பெயரில் நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நான் அவமதிக்கும் வகையில் பேசிவிட்டேன் என்று கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கு பதில் சொல்கிறோம் என்று எதையும் பேசக்கூடாது. என் மீதான விமர்சனத்திற்கு விளக்கம் தர நான் தயாராக இருக்கிறேன். எனவே, கட்சியினர் யாரும் அதுகுறித்து பேச வேண்டாம். எந்த தலைவரையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு கிடையாது.
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி எதிர்ப்பு என்பது மைய அரசியலாக சுழன்று வருகிறது. ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்துகொண்டு பெரியார் கருத்துகளை அவர் பேசினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை யாரும் விமர்சிப்பது கிடையாது என்று கூறினேன். திராவிட எதிர்ப்பு என்றாலே அது கருணாநிதி எதிர்ப்பு என்று மட்டுமே விளக்கினேன். என்னுடைய அரசியலும் கருணாநிதியை எதிர்த்து தான் இருந்தது என்று திமுக கூட்டத்தில் கூறினேன். ஆனால், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கில் பேசிவிட்டதாக கட்டமைக்கப் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் எதுவேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இதுகுறித்து பேச வேண்டாம். மேலும், தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தேசிய அளவில் மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்று பேசியுள்ளார்.