
காலம் மாறும்போது தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம் என்று மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றதாக மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக மக்களவையிலும் அவர் பேசினார். இந்த தேர்தல் மோசடியில் மத்தியில் ஆளும் பாஜகவையும், தேர்தல் ஆணையத்தையும் ராகுல் காந்தி மிகக்கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் நடந்த முறைகேடுகளை குறித்து செய்தியாளர்கள் முன் ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக குற்றம் சாட்டினார். இந்த தேர்தல் மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அது முதுநிலையோ இளநிலை அதிகாரியோ யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், காலம் மாறும்போது தவறிழைத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தண்டனை நிச்சயம். வாக்குகளை திருடுவது வெறும் முறைகேடு மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயல். குற்றவாளிகளே கேட்டுக் கொள்ளுங்கள், காலம் மாறும்போது தண்டனை நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.