
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரையில் ஆக-25-ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. அன்றைய தினமே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ஆக.27-ம் தேதி வர இருப்பதால் மாநாடு நடைபெறும் தேதியை மாற்றியமைக்குமாறு காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று ஆக.21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.